Thursday, November 22, 2012

மனக் கவலைகள் ஒழியவும் பிறவா நிலை எய்தவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே


நெக்குள்ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவர்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே


இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே


கொள்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே


மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யாவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே


நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெயவாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே


இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தவங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே


போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான் முடி நெடிய பண்பராய்
யாதும் காண் பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே


காஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே


நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞான சம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே

திருச்சிற்றம்பலம்