Friday, April 16, 2010

வெப்பத்தினால் உண்டாகும் நோய்களான ஜுரம், அம்மை, வயிற்றுவலி முதலியன நீங்கச் செய்யும் பதிகம்


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கபடுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே

அருந்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொறுத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே

எயிலது அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாளவாயான் திருநீறே

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவாயான் திருநீறே

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமது உண்டமிடற்று எம் ஆலவாயான் திருநீறே

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் எத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

திருச்சிற்றம்பலம்
























குழந்தை செல்வம் கொடுக்கும் பதிகம்


கண்காட்டும் நுதலானுங், கனல் காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும், பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும், பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீ வினையே

மண்ணோடு நீர், அனல், காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினோடு ஆண் பெருமையோடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே

விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல் விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகு என்று
தடமண்டு துறைகெண்டை தாமரையின்பூ மறையக்
கடல் விண்ட கதிர் முத்த நகை காட்டும் காட்சியதே

வேலைமலி தண்கானல் வெண் காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேல் அடர், வெங்காலன், உயிர், விண்டபினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதியநுதல் உமையோர் கூறு உகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பலஒதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைந்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறைவனே

பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறைகோவில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர் வரியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழிபொருள் என்றும்
பேதையர்கள் அவர், பிரிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே

தண்பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே

திருச்சிற்றம்பலம்





















தடைபட்ட திருமணம் இனிதே விரைவில் நடைபெற (ஆண், பெண் இருவருக்கும்) பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்


சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே

சிந்தா எனுமால் சிவனே எனுமால்
முந்தா எனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே

அறையார் கழலும் அழல் வாயரவும்
பிறையார் சடையும் உடையார் பெரிய
மறையோர் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளைகொண் டெழில் வவ்வினையே

ஒலிநீர் சடையில் கரந்தாயுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வாய்இவளை
மெலிநீர்மையள் ஆக்கவும் வேண்டினையே

துணிநீல வண்ணம் முகில் தோன்றியன்ன
மணிநீலகண்டம் உடையாய் மருகல்
கணிநீலவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீல ஒண்கண் அயர்வு ஆக்கினையே

பலரும் பரவப்படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்றுடையாய் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடைபோர்ந்து
அலறும் படுமோ அடியாள் இவளே

வழுவாள் பெருமான் கழல் வாழ்கஎனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே

இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே

எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியாத தொர் தீத்திரளாய் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக்கினையே

அறிவில் சமணும் அலர் சாக்கியரும்
நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார்
மறிஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே

வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்
வியன் ஞாலமெல்லாம் விளங்கும் புகழே

திருச்சிற்றம்பலம்