Friday, December 7, 2012

எலும்பு முறிவு குணமடையவும் முற்பிறப்பு வினைகள் நீங்கவும் உதவும் பதிகம்

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
      பாடல்விளை யாடல் அரவம்
மங்குலொடுநீள் கொடிகண் மாடமலி
      நீடுபொழில் மாகறல் உளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
      திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணலடி சேர்பவர்கள்
      தீ வினைகள் தீரும் உடனே

கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி
     ஆடல்கவின் எய்தி அழகார்
மலையின் நிகர் மாடம் உயர் நீள்கொடிகள்
     வீசுமலி மாகறல் உளான்
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன்
     ஏந்தி எரிபுன் சடையினுள்
அலைகொல்புனல் ஏந்து பெருமான் அடியை
     ஏத்த வினை அகலுமிகவே

காலையோடு துந்துபிகள் சங்கு குழல்
     யாழ் முழவு காமருவு சீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
     ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலையுடை பேணியதன் மேலோர் சுடர்
     நாகமசையா அழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
     ஏத்தவினை பறையும் உடனே

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
     உந்திஎழில்மெய்  உள் உடனே
மங்கையரும் மைந்தர்களு மன்னுபுனலாடி
     மகிழ் மாகறல் உளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
     செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக வேத்தி
     வழிபாடு நுகரா எழுமினே

துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
     தோன்றுமது வார்கழநிவாய்
மஞ்சுமலை பூம்பொழிலின் மயில்கள்நட
     மாடமலி மாகறல் உளான்
வஞ்சமத யானை உரி போர்த்துமகிழ்
     வானோர் மழுவாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடியாரை
     நலியா வினைகளே

மன்னுமறை யோர்களோடு பல்படிம
     மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகையால் இனி திறைஞ்சி
     இமையோரில் ஏழு மாகறல் உளான்
மின்னனை விரி புன்சடையின் மேல் மலர்கள்
     கங்கையோடு திங்கள் எனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்க உயர்
     வானுலகம் ஏறல் எளிதே

வெய்யவினை நெறிகள் செல வந்தணையு
     மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரிகானல்மது வார்கழனி
      மாகறல் உளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
     தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சி
     அடையாவினைகள் அகலுமிகவே

தூசுதுகில் நீள் கொடிகள் மேகமொடு
     தோய்வன பொன் மாடமிசையே
மாசுபடு செய்கை மிக மாதவர்கள்
     ஓதி மலி மாகறல் உளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
     கச்சையுடை பேணிஅழகார்பூசு
பொடிஈசன் என ஏத்தவினை
     நிற்றல் இல போகும் உடனே

தூய விரி தாமரைகள் நெய்தல்
     கழுநீர் குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
     ஓசை பயில் மாகறல் உளான்
சாயவிரல் ஊன்றிய இராவணன்
     தன்மைகெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள்வினை
     யாயினவும் அகல்வதெளிதே

காலினல பைங்கழல்கள் நீள் முடியின்
     மேலுணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரியாகி
     உயர் மாகறல் உளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
     நாகமொடு கூடியுடனாய்
ஆலும் விடை யூர்தியுடை அடிகள் அடி
     யாரை அடையாவினைகளே

கடைகொள் நெடுமாடமிக ஓங்குகமழ்
     வீதிமலி காழியவர்கோன்
அடையும் வகையால் பரவி அரனையடி
     கூடுசம் பந்தனுரையால்
மடைகொள் புன லோடுவயல் கூடுபொழில்
     மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர் வாரவர்கள்
     தொல்வினைகள் ஒல்கும் உடனே

திருச்சிற்றம்பலம்